இலங்கையில் ஒரு மாதத்தில் மாத்திரம் அதிகரித்த கொரோனா மரணங்கள்
இலங்கையில் கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் ஆயிரத்து 500 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
கொரோனா மரணங்களின் உயிரிழப்புக்களில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்ய சுகாதார நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 2 இலட்சத்து 59 ஆயிரத்து 89 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 ஆயிரத்து 30 மரணங்களும் பதிவாகியுள்ளன. இந்தநிலையில் இலங்கையில் பிரித்தானிய திரிபு கொரோனாவான ஆல்பா மாறுபாடு கண்டறியப்பட்டதன் விளைவாக ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
ஜூன் மாதத்தில் மாத்திரம் சுமார் 1500 கொரோனா தொற்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கு முன்னர் மே மாததில் 806 உயிரிழப்புகளும், ஏப்ரல் மாத்தில் 110 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் , ஜூன் மாதத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்தமைக்கான காரணத்தை விசாரிக்க ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
அதேநேரம் கொரோனா வைரஸின் மிகவும் ஆபத்தான டெல்டா இலங்கையில் பரவி வருவதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.