மன்னாரில் தாதியர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா
மன்னார் மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும், 2 ஊழியர்களும் அடங்குகின்றனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன், மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மாதிரிகள் பெறப்பட்ட 3 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிகாட்டினார். மேலும் கொரோனா தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தனர் என்ற அடிப்படையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் பொது வைத்தியசாலை மருத்துவ விடுதியில் கொவிட் - 19 நோயாளிகள் இருவர் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த விடுதியில் பணியாற்றிய மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நோயாளிகள் எனப்பலர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தொற்றுக்குள்ளாகியமை கண்டறிப்பட்டது.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் அடிப்படையில் தாதிய உத்தியோகத்தர்கள் இருவரும், சுகாதார ஊழியர்கள் இருவரும் என நால்வர் சுயதனிமைப்படுத்தபட்டிருந்தனர்.
அவர்கள் நால்வருக்கும் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தபட்டுள்ளது.