வெளிநாடுகளில் உருவாகும் புதிய கொரோனா திரிபுகளால் இலங்கைக்கும் ஆபத்து
இலங்கையின் கேந்திர அமைவிடத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், வெளிநாடுகளில் அடையாளங்காணப்படும் கொவிட் - 19 வைரஸின் புதிய திரிபுகள் எமது நாட்டுக்குள் இலகுவாகப் பிரவேசிப்பதற்கான அச்சுறுத்தல் நிலை உயர்வாகக் காணப்படுகிறது.
எனவே முன்னுரிமை ஒழுங்கின் பிரகாரம் நாட்டுமக்கள் அனைவருக்கும் மூன்றாம் கட்ட செயலூட்டித் தடுப்பூசிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினரான வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, அண்மைக் காலத்தில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றாமல் அலட்சியமாக செயற்படுவதனை அவதானிக்க முடிவதாகத் தெரிவித்துள்ள அவர்,
மீண்டுமொரு நீண்டகால முடக்கத்தை எதிர்கொள்ளக்கூடிய இயலுமை நாட்டின்’ பொருளாதாரத்துக்கோ அல்லது மக்களுக்கோ இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.