வடக்கில் அதிகரிக்கும் கொரோனா - சுகாதார பணிப்பாளர் வெளியிட்டுள்ள தகவல்
வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதன்படி 12 பேர் மன்னாரிலும் 8 பேர் யாழ்ப்பாணத்திலும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 304 பேரின் மாதிரிகள் இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கையிடபட்டடுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று 457 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் 20 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நவாலியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர் நவாலியில் கடந்த வாரம் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஆசிரியையுடன் பேருந்தில் முல்லைத்தீவுக்கு சென்று திரும்பியவர். ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மெலிஞ்சிமுனையில் 6 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்குபற்றியவர்கள். மன்னார் நகரில் உள்ள கொமர்ஷல் கிறடிட் நிதி நிறுவனத்தில் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரி சபையில் பணியாற்றும் இருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்கள். மன்னார் மாந்தை மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் நகரில் சலூன் தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஒருவருக்கு தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.