இலங்கையில் உச்சம் தொட்ட கொரோனா -வைத்தியசாலை நடைபாதைகளில் படுத்துறங்கும் கொரோனா நோயாளர்கள்
கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளமையால், வைத்தியசாலைகள் பலவற்றில், நடைபாதைகளில் அவர்கள் பாய்களைப் போட்டு, படுத்து உறங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
இது, பேராபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வைத்தியசாலைகள் பலவற்றில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களை அனுமதிக்கும் விடுதிகள் மட்டுமன்றி, அவசர சிகிச்சைப் பிரிவு விடுதி கட்டில்களும் கொரோனா தொற்றாளர்களால் நிரம்பியுள்ளன என்றும், அவசர நிலைமை பிரகடனப்படுத்தியிருக்கும் வைத்தியசாலைகளின் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
இராகமையில் உள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில், கொரோனாத் தொற்றாளர்கள் நடைபாதையில், பாய்களைப் போட்டு உறங்குவதையும் அவதானிக்க முடிகின்றது. நாளாந்தம் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளமையால் இவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என அந்த வைத்தியசாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவுள்ள நான்கு கட்டில்களும் நிரம்பியுள்ளன. போதனா வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நான்கு கட்டில்கள் மட்டுமே உள்ளன. அந்த நான்கு கட்டில்களும் கொரோனா தொற்றாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சில வைத்தியசாலைகளில் அந்த நான்கு கட்டில்களும் நிரம்பியுள்ளன. பதுளை வைத்தியசாலையிலும் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள சகல அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் ஆகக்கூடுதலான கொள்ளளவுக்கு அண்மித்துள்ளது. ஆகையால், கொழும்புக்கு வெளியே கொரோனா மத்திய நிலையங்களாக இருக்கும் மத்திய நிலையங்களின் புகுமுகக்கூடத்தில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகின்றனர்.
“தற்போது இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள்களின் எண்ணிக்கையைப் போல, இன்னும் நான்கு அல்லது ஐந்து மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர்” என ரவி குமுதேஷ்
தலைமையிலான துணை மருத்துவ நிபுணர்களின் கூட்டு ஆணையம்
அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.