கொரோனாவின் தாக்கம் சவால் மிக்கது! நாட்டை முடக்குவதா? இல்லையா? - இராஜாங்க அமைச்சர் தகவல்
கொரோனா பரவல் முதலாம் , இரண்டாம் அலைகளை விட மூன்றாம் அலை சவால் மிக்கதாகவுள்ளது. எனவே இதனைக் கட்டுப்படுத்த சுகாதார தரப்பினருக்கு சகலரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
வத்தளை பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற கொரோனா தொடர்பான கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கோட்டாபய ராஜபக்க்ஷவின் ஆலோசனைக்கு அமைய கொரோனா மூன்றாம் அலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுக்களுக்கு இதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. முதலாம் , இரண்டாம் அலைகளை விட மூன்றாம் அலை சவால் மிக்கதாகவுள்ளது.
எனவே இதனைக் கட்டுப்படுத்த சுகாதார தரப்பினருக்கு சகலரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். முழு உலகிற்கும் சவாலாக அமைந்துள்ள இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மற்றும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளுக்கமைய நாட்டை முடக்குவதா இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்கும்.
அந்த தீர்மானம் எதுவாகக் காணப்பட்டாலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 கட்டுப்படுத்தலுக்காக சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு உள்ளிட்ட சுகாதார தரப்பினருக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு தொற்றுக்குள்ளான மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களை தடையின்றி வழங்கவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
கொரோனா கட்டுப்படுத்தலுடன் டெங்கு உள்ளிட்ட ஏனைய நோய் கட்டுப்பாடு தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.