மூன்றாவது புதிய கொரோனா -வெளியாகும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
மூன்றாவது புதிய கொரோனா வைரஸ் நைஜீரியாவில் பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா புதிதாக உருமாறி மிக வேகமாக பரவி வருகிறது.
இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் முன்பை விட 70% அதிக வேகத்தில் பரவி வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து இடையேயான விமானப் போக்குவரத்துக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன. இதேபோல, தென்னாபிரிக்காவிலும் புதிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.
எனவே, பாதுகாப்பு கருதி தென்னாபிரிக்கா இடையேயான விமானப் போக்குவரத்தையும் பல நாடுகள் தடை செய்துள்ளன. இந்நிலையில், நைஜீரியாவிலும் புதிய கொரோனா உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆபிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் ஜோன் கெங்காசாங் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இங்கிலாந்து, தென்னாபிரிக்காவில் பரவும் கொரோனாவை போல அல்லாமல் இது தனி வைரஸாக உருவாகியுள்ளது.
புதிய வைரஸ் குறித்து ஆய்வுகளை நடத்தி வருகிறோம். எங்களுக்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது. தற்போதைய சூழலில் எதுவும் சொல்ல முடியாது.
எனினும், நைஜீரியாவில் கொரோனா பாதிப்பு அதிவேகத்தில் அதிகரிப்பதாக தெரியவில்லை. தொடர்ந்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.