துறைமுக நகர விவகாரத்தை மறைக்கவே கொரோனா தடுப்பூசிகள்! எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
துறைமுக நகர விவகாரத்தை சமூகமாக கையாளுவதற்காகவே மேலும் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை சீனா இலவசமாக இலங்கைக்கு வழங்குகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே 5 லட்சம் அல்ல நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான 320 லட்சம் தடுப்பூசிகளையும் இலவசமாகவே வழங்கவேண்டும். எனினும் அதுவும் துறைமுக நகரத்திற்கு ஈடாகாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா அபாயத்துடனும், மதத் தலைவர்களின் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் துறைமுக நகர சட்ட மூலத்தை நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிக்கிறது. இதனை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே மிகவும் சூட்சுமமான முறையில் 19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தில் காணப்படுகின்ற பல விடயங்கள் 20 இல் நீக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் நீதிமன்றத்திற்கு சென்றிருக்காவிட்டால், சட்ட விரோதமான இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கும். எனினும் அந்த முயற்சி நீதிமன்றத்தின் தீர்ப்பினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு அரச அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும்.
ஆனால் ஆணைக்குழுவின் தலைவர் மாத்திரமே இலங்கையராகவும், ஏனையோர் வெளிநாட்டவர்களாகவும் அல்லது இரட்டை குடியுரிமை கொண்டவர்களாகவுமே காணப்படுவர்.
சட்டத்தினூடாக 25 வீதமான வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் வேலை வாய்ப்பினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை நாம் முற்றாக எதிர்க்கின்றோம்.
90 வீதமான வேலை வாய்ப்பு இலங்கை பிரஜைகளுக்கே வழங்கப்பட வேண்டும். துறைமுக நகர விவகாரத்தை சுமூகமாக கையாள்வதற்கே, மேலும் 5 லட்சம் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.
உண்மையில் இலங்கை மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான 320 லட்சம் தடுப்பூசிகளையும் சீனா இலவசமாகவே வழங்க வேண்டும். ஆனால் அதுவும் துறைமுக நகரத்திற்கு ஈடாகாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.