சுற்றுலாப் பயணிகளை அழைத்து இலங்கை மக்களை ஆபத்தில் தள்ளிவிட்டது அரசாங்கம்! லக்ஷ்மன் கிரியெல்ல காட்டம்
இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்பட உக்ரைன் பிரஜைகளே காரணம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள உக்ரைன் பிரஜைகளில் 6 பேர் கொரோனா தொற்றாளர் என கண்டறியப்பட்டுள்ளமை தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பேசிய அவர், கொரோனா இரண்டாவது அலை ஆரம்பமாக உக்ரைன் பிரஜைகளே காரணம் என்பதை அரசாங்கம் அறிந்துகொண்டும், உலகத்திற்கு தெரிய சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வந்து, நாட்டை ஆபத்தில் தள்ளி வருவகிறது.
உலகத்திற்கு காட்ட அரசாங்கம் செய்யும் இப்படியான வேலைகளால் நாட்டில் வாழும் அப்பாவி மக்களே பாதிக்கப்படுவார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஏன் இந்த அவசரம்.
கொரோனாவுக்கு மருந்தை தயாரித்த பின்னர் படிப்படியாக சென்றால் பிரச்சினையில்லை. இப்படி சென்றால் நமக்கு தெரியாமலேயே கொரோனா வைரஸின் புதிய திரிபு இலங்கைக்குள் வந்து விடும்.
அநியாயமாக நாட்டை ஆபத்தில் தள்ள வேண்டாம் என எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.