கொரோனா நோயாளிகளில் ஒக்ஸிஜன் தேவையானோர் தொடர்பான தகவல் வெளிவந்தது
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளில் 17 வீதம் பேரின் சிகிச்சைக்கு ஒக்ஸிஜன் தேவைப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களில் 4% முதல் 5% வரையான நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு (ஐசியு) அனுப்பப்படுவதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்து கொவிட் நோயாளிகளில் சுமார் 25% முதல் 28% வரையானோர் அறிகுறிகளாக உள்ளனர்.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் நேற்றையதினம் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
கொவிட் பரவும் வேகம், பி.சி.ஆர் சாத்தியக்கூறு, தனிமைப்படுத்தல், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் சிகிச்சை, ஒக்ஸிஜன் அளவு மற்றும் இறப்பு விகிதம் குறித்து இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.
கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது முழுமையாக நாட்டை முடக்கும் செயற்பாடு ஏற்பட்டால் செயல்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிடுவதிலும் கவனம் செலுத்தப்பட்டது.