அடுத்த ராஜபக்சர் யார் ஷிரந்தி, நாமலை தொடர்ந்து மகிந்த குடும்பத்தை சூழும் வழக்குகள்!
இலங்கையின் அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றி தற்போது ஊழல் குற்றச்சாட்டுகளும் நீதிமன்ற வழக்குகளும் தீவிரமடைந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகன்கள் மற்றும் சகோதரர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஒரு காலத்தில் இலங்கையின் அதிகார மையமாகத் திகழ்ந்த இந்தக் குடும்பம், தற்போது அடுத்தடுத்து எழும் சட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.
சிறுவர் வைத்தியசாலைக்கான நன்கொடை
முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சஷ, கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டார்.

அவர் தலைமை தாங்கும் 'சிரிலிய சவிய' (Siriliya Saviya) அறக்கட்டளை, கொழும்பிலுள்ள சிறுவர் வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காகச் சேகரித்த சுமார் 100 மில்லியன் ரூபா நன்கொடையைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிறுவர் வைத்தியசாலைக்கு MRI ஸ்கேன் இயந்திரமொன்றை சீன அரசாங்கம் ஏற்கனவே நன்கொடையாக வழங்கியிருந்ததாக விசாரணையாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
எனினும், மற்றுமொரு MRI இயந்திரத்தை வாங்குவதற்கான நன்கொடைகள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டதாகவும், அவ்வாறு சேகரிக்கப்பட்ட பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிதி வீடொன்றைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குறித்த சொத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மறுத்துள்ளார்.
நன்கொடைப் பணம் பாதுகாப்பாக வங்கிக் கணக்கில் இருப்பதாகவும், அந்தக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உடல்நலக் காரணங்களைக் குறிப்பிட்டு ஷிரந்தி ராஜபக்ச சார்பில் அவரது சட்டத்தரணிகள் முன்பிணை கோரி நீதிமன்றத்தை நாடியபோதும், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமலுக்கும் தொடரும் நெருக்கடி
ஷிரந்தி ராஜபக்சவின் கைது நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான 40 வயதான நாமல் ராஜபக்சவும் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

தேசிய விமான சேவைக்காக எயார் பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பான அரச ஒப்பந்தத்தில் 30,000 அமெரிக்க டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அத்துடன், அரச காணி ஒன்றின் உரிமை மாற்றத்தை விரைவுபடுத்துவதற்காக வெளிநாட்டு தனியார் நிறுவனம் ஒன்று 211,000 அமெரிக்க டொலர் இலஞ்சம் வழங்கியதாகக் கூறப்படும் மற்றுமொரு விவகாரத்திலும் நாமலுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த இரு சம்பவங்களும் அவரது தந்தை மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஏனைய உறுப்பினர்களும் விசாரணையில்
ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளனர்.

மகிந்த ராஜபக்சவின் மற்றுமொரு மகனான 38 வயதுடைய யோசித ராஜபக்சவுக்கு எதிராகப் பணமோசடி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அதேவேளை, மகிந்தவின் சகோதரர் சமல் ராஜபக்சவின் மகனான 50 வயதுடைய சஷீந்திர ராஜபக்ச, ஊழல் வழக்கொன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்ச, முறைகேடான பணத்தைப் பயன்படுத்தி சொத்துகளைக் கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் பிடியாணையை எதிர்கொண்டுள்ளார்.
அவர் தற்போது அமெரிக்காவில் இருப்பதாக நம்பப்படுகிறது. இதற்கிடையில், மாத்தறையில் அமைந்துள்ள பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமான சொத்தொன்றை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இரண்டு தசாப்தங்களாக இலங்கையை ஆட்டிப்படைத்த குடும்பம்
தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டையைத் தளமாகக் கொண்ட ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு சுமார் இரண்டு தசாப்தங்களாக இலங்கையில் நீடித்தது. 2004ஆம் ஆண்டு பிரதமராகத் தெரிவான மகிந்த ராஜபக்ச, 2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கள பௌத்த மக்களில் பெரும்பாலானோரின் ஆதரவை அவர் பெற்றிருந்தார்.
போரின் இறுதிக்கட்டத்தில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது இளைய சகோதரர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றினார்.
எனினும், போரின் இறுதி வாரங்களில் சுமார் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடுகள் தெரிவித்தன.
இதனால் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கான கோரிக்கைகள் எழுந்தன.
போருக்குப் பின்னர் தமிழ் மக்களுடனான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
மேலும், போருக்குப் பின்னரான காலப்பகுதியில் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்காக சீனாவிடமிருந்து இலங்கை சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற்றது.
அவற்றில் பல திட்டங்கள் ஊழல் குற்றச்சாட்டுகளால் சர்ச்சைக்குள்ளாகின.
மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பில் மாற்றம் செய்திருந்தபோதிலும், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிடம் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் மீள்வருகைக்கும் முக்கிய பின்னணியாக அமைந்தன.

தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களில் 279 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் 45 பேர் வெளிநாட்டவர்கள். இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னர் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களை முன்னிறுத்தி அரசியல் பிரசாரத்தை முன்னெடுத்த கோட்டாபய ராஜபக்ச, 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றார்.
அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்ததுடன், குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை வழங்கினார்.
சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரும் அதிகாரமிக்க பதவிகளைப் பெற்றனர்.
எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதற்காகத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் பின்னர் எழுந்தன.
2023ஆம் ஆண்டு பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய தகவலில், இலங்கையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலே, தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுபவர்களைச் சந்தித்ததாக ஒரு தகவல் வெளியானது.
தேர்தலுக்கு முன்னதாக அரசியல் நோக்கத்துடன் இந்தத் தாக்குதல்கள் தொடர்பான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அந்தத் தகவலில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் சுரேஷ் சாலே பயங்கரவாதச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் கோட்டாபய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவரைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட மனுவொன்றையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 24 முஸ்லிம் நபர்களில் 15 பேருக்கு கடந்த மாதம் இலங்கையின் மேல் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
எனினும், தாக்குதல்களின் பின்னணியில் இருந்த முக்கிய சூத்திரதாரிகள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட பலரின் குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்ச குடும்பத்தின் வீழ்ச்சி
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களும் பின்னர் ஏற்பட்ட கொவிட்-19 பெருந்தொற்றும் இலங்கையின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்தன.

இந்தக் காலப்பகுதியில் பொருளாதாரத்தை முறையாக நிர்வகிக்கத் தவறியமை மற்றும் பரவலான ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக ராஜபக்ச குடும்பம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
இறுதியில் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களைத் தூண்டியது.
'அரகலய' என அழைக்கப்பட்ட மக்கள் எழுச்சியின் அழுத்தத்தால் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறினார்.
இதன் மூலம் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் ஆதிக்கம் பெருமளவில் சரிவடைந்தது.
அதனைத் தொடர்ந்து இடைக்கால அரசாங்கம் நாட்டை நிர்வகித்தது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றார்.
ராஜபக்ச குடும்பம் உள்ளிட்ட முந்தைய அரசாங்கங்களின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார்.
தற்போது ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவதும், அவர்களுக்கு எதிராக வழக்குகள் முன்னெடுக்கப்படுவதும் அந்த உறுதிமொழியின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் நடவடிக்கை
ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் தொடர்பில் அரசியல் ரீதியாகவும் மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

வடமேல் மாகாணத்தின் நிக்கவெரட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சமூக, அரசியல் மற்றும் பதவி அதிகாரங்களைப் பெற்றிருந்த சிலர் அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டத்திற்கு மேலானவர்களாகச் செயற்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.
ஆனால், அரசாங்கம் மக்களைத் தவறாக வழிநடத்துவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் திருடர்களுக்குத் தண்டனை வழங்குவதில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னரே அரசாங்கம் மக்களைக் கைது செய்து, ஊழல்வாதிகளைத் தண்டிப்பதாகப் பிரசாரம் செய்வது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், இத்தகைய குற்றச்சாட்டுகளை அரசியல் ஆய்வாளர் காமினி வியாங்கொட நிராகரித்துள்ளார். இது அரசியல் பழிவாங்கல் அல்ல என்றும், சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் உள்ள ஐரோப்பிய பல்கலைக்கழக நிறுவனத்தின் சர்வதேச சட்ட ஆய்வாளர் ரமிந்து பெரேராவும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினர் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அது அந்தக் குடும்பத்தின் அரசியல் செல்வாக்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய வெளிப்பாடுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் நிலையை மேலும் பலவீனப்படுத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் இலங்கையின் அரசியலையும் அதிகாரக் கட்டமைப்பையும் தீர்மானித்த ராஜபக்ச குடும்பம் இன்று ஊழல் குற்றச்சாட்டுகள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் எனப் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
எனினும், இவை தொடர்பான இறுதி உண்மைகள் நீதிமன்ற விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் மூலமே வெளிப்பட வேண்டியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |