ஞானசார தேரரின் சிறைவைப்பு சட்டவிரோதமானது: முன்னாள் தலைமை நீதியரசர்
கலகொட அத்தே ஞானசார தேரரை சிறையில் அடைத்து வைத்துள்ளமை முற்றிலும் சட்டவிரோதமானது என முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா (Sarath N. Silva) தெரிவித்துள்ளார்.
கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அரசியல் அலுவலகத்தில் கூட்டு எதிர்க்கட்சியினரால் நேற்று (03-11-2026) ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்தில் விசாரணை
ஒப்படைப்பு பிடியாணை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் கீழ் ஒரு நபர் சிறையிலடைக்கப்படும் போது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தியோகபூர்வ ஒப்படைப்பு பிடியாணை வழங்கப்பட வேண்டியது கட்டாயமாகும் என சரத் என். சில்வா சுட்டிக்காட்டினார்.

அப் பிடியாணையில் நபர் புரிந்த குற்றம், தண்டனை விதிக்கப்பட்ட திகதி மற்றும் சிறையில் தடுத்து வைக்கப்பட வேண்டிய காலப்பகுதி என்பன தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஞானசார தேரரின் விவகாரத்தில் அக் குறிப்பிட்ட ஆவணத்தில் இவை எதுவும் உள்ளடக்கப்படவில்லை எனத் தான் கருதுவதாக நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டப்பூர்வ அதிகாரம்
இதனால் சட்ட நடைமுறைகளுக்கு முரணாக வழங்கப்பட்ட ஒரு பிடி ஆணையின் அடிப்படையிலேயே சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஞானசார தேரரைச் சிறையில் தடுத்து வைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நடைமுறைப் பிழைகள் காரணமாக ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உச்சநீதிமன்றம் (SC) இரத்துச் செய்திருந்த போதிலும் அவரை மீண்டும் சிறையிலடைக்குமாறு எந்தவொரு உத்தியோகபூர்வ உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரின் எஞ்சிய தண்டனைக் காலத்தைச் அனுபவிப்பதற்காக அவரை மீண்டும் சிறையிலடைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் (CoA) சிறைச்சாலைத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்த போதிலும் அக் காலப்பகுதியில் அத்தகைய உத்தரவை பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் சட்டப்பூர்வ அதிகாரம் இருக்கவில்லை என சரத் என். சில்வா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |