ஒரு கைபேசி அழைப்புக்கு 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம்:ஹரக் கட்டாவின் பண வலையில் சிக்கிய அதிகாரிகள்
போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக் கட்டா’, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாதுகாப்புக் காவலில் இருந்தபோது, அங்கிருந்த உயர் அதிகாரிகளுக்குப் பில்லியன் கணக்கான ரூபாய் பெறுமதியான சொகுசுப் பொருட்கள் மற்றும் பணம் இலஞ்சமாக வாரி இறைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் விமானப்படை புலனாய்வு அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க இதனை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஐந்தாவது மாடியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்த ஹரக் கட்டா, வெளியில் உள்ள தனது சகாக்களுடன் தொடர்புகொள்வதற்காகப் பெரும் பணத்தை செலவிட்டுள்ளார்.
5 லட்சம் ரூபாய் இலஞ்சம்
அங்கிருந்த ஒரு குறிப்பிட்ட உயர் காவல்துறை அதிகாரியின் அலுவலகத்திற்கு ஹரக் கட்டா நேடியாக அழைத்துச் செல்லப்பட்டு, வெளியில் ஒரேயொரு கைபேசி அழைப்பை எடுத்துப் பேசுவதற்காக மட்டும் 5 லட்சம் ரூபாய் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது என்று கீர்த்தி ரத்நாயக்க அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த அதிர்ச்சித் தகவல் தற்போது குற்றவாளிகளின் இலஞ்சப் பட்டியலில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹரக் கட்டாவிற்குப் பாதுகாப்புக் காவலில் சொகுசு வசதிகளைச் செய்துகொடுப்பதற்காகவும், விசாரணைகளைத் திசை திருப்புவதற்காகவும் CID மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குப் பணத்தைத் தாண்டி அதிநவீன மின்னணுப் பொருட்கள் இலஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளில் ஈடுபட்டுள்ள மேல்மட்ட அதிகாரிகளுக்கு 16 ஆப்பிள் ஐபோன்களும், 9 அதிநவீன மடிக்கணினிகளும் இலஞ்சமாகப் பரிமாறப்பட்டுள்ளன என்று நேர்காணலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடுமையான குற்றச்சாட்டு
ஹரக் கட்டாவின் 120 மில்லியன் ரூபாய் இலஞ்ச விவகாரம் மற்றும் சொத்துக்கள் முடக்கம் குறித்துப் பேசப்படும் நிலையில், இந்த கைபேசி அழைப்புகள் மூலமாகவே ஹரக் கட்டா வெளியில் இருக்கும் மகேஷ் மதுவந்த போன்ற தனது முக்கிய சகாக்களுக்கு 'உண்டியல்' முறை மூலம் பணத்தை எவ்வாறு பரிமாற்ற வேண்டும் என்ற கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார்.

இந்தக் கைபேசி அழைப்புகள், அதற்கான நேரங்கள் மற்றும் கோபுரத் தரவுகள் ஆகியவற்றைச் சோதித்துப் பார்த்தாலே இந்தத் துரோகத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளைப் பரிவேதனைச் சான்றுகளுடன் மிக எளிதாக நிரூபிக்க முடியும் என்று கீர்த்தி ரத்நாயக்க கூறுகிறார்.
இருப்பினும், இந்த விசாரணைகளை ஆழமாக முன்னெடுத்தால் காவல்துறையின் மிக முக்கிய உயர் அதிகாரிகளின் பெயர்கள் அம்பலமாகிவிடும் என்பதால், தற்போதைய விசாரணைகள் திட்டமிட்டபடி மிக மந்தகதியில் நகர்த்தப்பட்டு வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |