ஏறாவூர் நகர சபையின் ஊழல் - நடந்தது என்ன..!
குப்பை கொட்டுவதற்காக என்று கூறி ஏறாவூர் நகர சபை நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட தனியார் காணி கொள்வனவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் ஏறாவூர் நகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக என்று கூறி 04 ஏக்கர் காணியை ரூபா 87 இலட்சத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த காணியை பிரபல காணி வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ஏறாவூர் நகர சபை நிர்வாகம் கொள்முதல் செய்துள்ளதாகவும், குறித்த காணிக்கு ரூபா. 27 இலட்சம் விலைக் கழிவு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
காணியின் உரிமை தொடர்பில் சர்ச்சைகள்
ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவிற்குள் தமிழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருக்கும் மேற்படி காணியானது தனியார் ஒருவருக்கு சொந்தமானது என்றும் ஆனால் குறித்த காணியின் உரிமை யாருக்கு என்பது தொடர்பாக பல வருடங்களாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் குறித்த காணிக்கு எதிராக ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 02.02.2023ம் திகதி தனது சட்டத்தரணி மூலம் கோரிக்கைக் கடிதம் அனுப்பியதாகவும் அதற்கு எந்தப் பதிலும் அனுப்பாமல் அவசர அவசரமாக ஏறாவூர் நகரசபைக்கு இக் காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இக் காணிக்கு உரிமை கோரும் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், போலி ஆவணங்களை தயாரித்து மேற்படி காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் மேற்படி காணி தொடர்பாக ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளரும் ஏறாவூர் காவல்துறையில் புகார் செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
மேற்படி காணிக்கு போலி ஆவணம்
ஏறாவூர் பற்று பிரதேசசபை எல்லைக்குள் அமைந்துள்ள மேற்படி காணிக்கு நபர் ஒருவர் போலியான ஆவணங்களை வழங்கி ஏறாவூர் பற்று பிரதேச சபை நிர்வாகத்திடம் 16.10.2021ம் அன்று இந்தக் காணிக்கு பாதை போடுவதற்கு அனுமதி பெற்றுள்ளார்.
பின்னர் வேறு ஒரு இடத்தை காட்டி மேற்படி காணிக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதை அறிந்த ஏறாவூர் பற்று பிரதேச சபை நிர்வாகம் இக் காணிக்குள் நடைபெற்ற பாதை அமைக்கும் பணியை நிறுத்துமாறு கோரியதுடன், ஏறாவூர்பற்று பிரதேசசபை தவிசாளர் மற்றும் செயலாளர் உடன் களவிஜயம் மேற்கொண்டு பாதை இடுவதை தடுத்து நிறுத்தி சட்டவிரோதமாக பெறப்பட்ட அனுமதியை இரத்துச் செய்து அது விடயமாக ஏறாவூர் காவல்துறை நிலையத்தில் அன்றைய தினமே (2021.10.16) CIB 2267/184 என்ற இலக்கத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்திருந்தனர்.
அத்துடன் மேற்படி காணி தங்களுடைய காணி எனக் கூறி தமிழ் மக்கள் சிலர் கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இந் நிலையில் அவசர அவசரமாக அதுவும் பிரதேச சபை கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் மேற்படி காணியை யாருடைய அனுமதியின் கீழ் இக் காணி கொள்வனவு செய்யப்பட்டது என்ற கேள்வி எழுகிறது ?
மேற்படி காணி கொள்வனவு பிரதேச சபை சட்டங்களை, சுற்று நிருபங்களை பின்பற்றாது குறிப்பிட்ட சில நபர்களின் தன்னிச்சையான முடிவு மற்றும் இலாப நோக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
1. இக் காணியை கொள்வனவு செய்யும் போது காணிக்குரிய ஆவணங்கள் சரியான ஆவணங்களா என எந்தச் சட்டதரணி மூலம் பரிசீலிக்கப்படவில்லை.
2. ஒரு அரச நிறுவனத்தின் தேவைக்காக கொள்முதல் செய்யப்படும் காணியை அளவீடு செய்வதற்கு அரச நிள அளளையார் திணைக்களத்தின் மூலமே அளவீடு செய்ய வேண்டும். ஆனால் இந்தக் காணி கொள்முதல் செய்யும் விடயத்தில் தனியார் நில அளவையாளரைக் கொண்டு நில அளவை படம் வரையப்பட்டுள்ளது.
3. இந்த நில அளவை செய்யும் படத்திற்கு காணியை அடையாளப்படுத்தும் நபர் காணி உரிமையாளராக இருக்கவேண்டும். ஆனால் இந்தப் படத்தில் ? பிரதேசசபை பதவி நிலை உத்தியோகத்தரால் Point Out செய்யப்பட்டுள்ளது.
4. இந்த நில அளவைப் படத்தில் காணியின் உரிமையாளர் சம்பந்தமாக எதுவும் கூறப்படவில்லை.
5. சபை கலைக்கப்பட்டு விசேட ஆணையாளாரின் கீழ் சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள காலப்பகுதியில் இவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்து காணி கொள்முதல் செய்ய செயலாளருக்கு யார் அனுமதி வழங்கியது என்ற கேள்விகள் எழுகிறது?
மக்களின் பெருந்தொகை வரிப்பணத்தை கையாண்டமை மற்றும் இலாப நோக்கத்திற்காக முறையற்ற சர்ச்சைக்குரிய காணியை பெருந்தொகை நிதி கொடுத்து கொள்வனவு செய்தமை உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் மேற்படி காணி கொள்வனவில் இடம் பெற்றிருக்கலாம் என்பதால் இது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏறாவூர் நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
