ஊழல் மோசடிகள் நாட்டிற்கே சாபக்கேடு - அனுரகுமார திசாநாயக்க ஆதங்கம்
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தமது பழைய ஊழல் மோசடிகளைப் பட்டியிடுவன் ஊடாக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு என்ன என்பதை அறிந்துகொள்ள முடிவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கமத்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், முன்னாள், இன்னாள் அரச தலைவர்கள் செய்த தவறுகளை அவர்கள் சார்பானவர்களே வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“விவசாயத்துறை அமைச்சர் நேற்றுச் சபையில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன குறித்து சபையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவர் பாவித்த வாகனங்கள், அவரது வீட்டின் நீளம் அகலம் குறித்தெல்லாம் பேசினார். பொது மக்களின் நிதி வீணாக பயன்படுத்தப்படுவது குறித்தும் குற்றஞ்சாட்டுகின்றார்.
அதேபோல் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அவருக்கு முன்னர் ஆட்சி செய்த அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் தவறான செயற்பாடுகள் குறித்து குற்றம் சுமத்தினார். அவர் விமானங்களைப் பாவித்த முறைமை, ஹெலிகொட்பர்களை பாவித்த விதம் குறித்தெல்லாம் பேசியுள்ளார்.
ஆகவே இந்தச் சபையில் இருந்து நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருந்தால், இந்த நாட்டிற்கு என்ன சாபக்கேடு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். அதனைவிட இந்தக் குப்பைக்கூடையை மேலும் கிளறினால் மேலும் மேலும் இது நாற்றமடிக்கும் என அவர்களே உறுதிப்படுத்துகின்றனர்.
ஆகவே இந்த மஹிந்தானந்த அளுத்கமகே, தயாசிறி ஜயசேகர மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இந்தக் குப்பைக்கூடையை மூடிமறைக்க பொது இணக்கப்பாட்டிற்கு வருவார்கள் என்றே நான் நினைக்கின்றேன்.
அதனை மீண்டும் தொடரமாட்டார்கள். எனினும் அவர்கள் இன்னமும் குப்பையை கிளறினால் நன்றாக இருக்கும்” என்றார்.