மைத்திரிக்கு ஒருபோதும் இடமில்லை: துமிந்த திஸாநாயக்க சூளுரை
சிறிலங்கா சுதந்திர கட்சியின் (SLFP) உறுப்புரிமை கூட இல்லாத அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை அதன் தலைவராக்குவதற்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தீர்மானித்ததை நீதித்துறைதடுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திர கட்சி நேற்று (8) அம்பாந்தோட்டையில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாரு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “இன்று இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள சகல நாடாளுமன்ற உறுப்பினர்களதும் தாய் வீடு சிறிலங்கா சுதந்திர கட்சியாகும். கடந்த காலங்களில் அவர்கள் பல திசைகளில் பிளவடைந்திருந்தாலும், தற்போது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதிய பயணத்தில் எம்முடன் கைகோர்த்துள்ளனர்.
முன்னாள் அதிபர்
கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட தவறுகளால் எமது நாடு வங்குரோத்தடைந்தது அவற்றுக்கு சில சந்தர்ப்பங்களில் நாமும் பொறுப்புக்கூற வேண்டியவராக உள்ளோம். எனவே தான் இழைத்த தவறை சரி செய்வதற்காக இந்த புதிய பயணத்தை தொடங்கியுள்ளோம் சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணியில் நாட்டை கட்டியெழுப்புவோம்.
நாட்டின் அடுத்த அதிபரை தெரிவு செய்யக்கூடிய பலம் எம்மிடமே உள்ளது சுதந்திர கட்சியின் ஆதரவின்றி எவராலும் வெற்றி பெற முடியாது. கட்சியின் உறுப்புரிமை கூட இல்லாத அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை (Wijeyadasa Rajapakshe) தலைவராக நியமிக்க முன்னாள் அதிபர் தீர்மானித்தார்.
எனினும் சட்டம் அதற்கு இடமளிக்கவில்லை இன்றல்ல, இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மைத்திரி தரப்பு சுதந்திர கட்சியை கையகப்படுத்த நாம் இடமளிக்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |