தென் கடலில் போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைதான 10 பேர் : நீதிமன்றின் உத்தரவு
தென் கடற்பரப்பில் நெடுநாள் மீன்பிடி படகு ஒன்றிலிருந்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களையும் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் 05 சந்தேகநபர்கள் பயணித்த ஒரு மீன்பிடி படகையும், அதற்கு இணையாக மேலும் 05 சந்தேகநபர்களுடன் பயணித்த மற்றொரு மீன்பிடி படகையும் கடற்படையினர் பொறுப்பேற்று கடந்த 12ஆம் திகதி திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
மீட்கப்பட்ட போதைப்பொருள்
இச்சம்பவம் குறித்து காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 49 வயதுக்கு இடைப்பட்ட இரணவில, மஹவெவ, மெல்சிரிபுர, வென்னப்புவ, நீர்கொழும்பு, நாக்குலுகம, தங்காலை, நெட்டோல்பிட்டிய மற்றும் கந்தர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 176 கிலோ 568 கிராம் ஹெரோயின், 478 கிலோ 326 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை வைத்திருந்தமை, இறக்குமதி செய்தமை மற்றும் கடத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.
அத்துடன் 8 பிஸ்டல்கள், 15 மெகசின்கள், 2 டி-56 ரக துப்பாக்கிகள், ஒரு எம்-16 ரக துப்பாக்கி மற்றும் அதன் 04 மெகசின்களை இறக்குமதி செய்தமை மற்றும் கைவசம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வாறு கைப்பற்றப்பட்ட சுமார் 654 கிலோகிராம் போதைப்பொருள் தொகுதியின் பெறுமதி 10 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |