குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு
குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த அப்பாவி முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு குருக்கள் மடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் சார்பாக AMM.ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
மேலதிக நடவடிக்கை
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம், களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படிருந்தது.
இந்த வழக்கு இன்று (25) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள படி உரிய இடத்தில் புதைக்கப்பட்டுள்ள மனித எச்சங்களை தோண்டி எடுப்பதற்கான கட்டளை நீதிவான் நீதிமன்ற நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலதிக நடவடிக்கைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளர்
அத்தோடு, முறைப்பாட்டாளர் சார்பாக குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் முன்னிலையாகி இருந்தார்.
இதையடுத்து, சம்பவ இடமான குருக்கள்மடம் கடற்கரை வீதியின் கடற்கரை எல்லைப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தின் நீதவான் நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் சம்பவ இடத்தினை சந்தேகிக்கப்படும் இடமாக அடையாளப்படுத்தினார்.
அத்தோடு, அதனை பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனப்படுத்தி இதற்கு காவல் பாதுகாப்பு வழங்குமாறு களுவாஞ்சிக்குடி காவல்துறையினருக்கு கட்டளை இட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கு நாளை ( 25 ) காலை 9.30 மணிக்கு மீள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








