நாளைய போராட்டத்திற்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு : காவல்துறைக்கு பாரிய ஏமாற்றம்
அதிகரித்த மின்கட்டண அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளையதினம் மின்சக்தி அமைச்சுக்கு அருகாமையில் நடத்தப்படவுள்ள 'சட்டவிரோத மின்சாரத்திற்கு எதிரான பேரணி'க்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு ஜா-அல "கந்தானை" வத்தளை மற்றும் மஹாப காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் விடுத்த கோரிக்கையை வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான இன்று (31) நிராகரித்துள்ளார்.
காவல்துறை விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பொது பேச்சு மற்றும் "ஒன்று கூடும்" சுதந்திரத்தை பாதுகாக்க நீதிமன்றம் கடமைப்பட்டிருப்பதாகவும், அமைதியான சூழ்நிலையை மீறினால் மக்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் இருப்பதாகவும் கூறினார்.
நான்கு காவல்நிலைய பொறுப்பதிகாரிகள் மன
ஜா எல காவல் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசூரிய, கந்தானை காவல் நிலைய பொறுப்பதிகாரி காமினி செனரத் ஹேவாவிதான, வத்தளை காவல் நிலைய பொறுப்பதிகாரி அனுர குணவர்தன மற்றும் மஹாபாகே காவல் நிலைய பொறுப்பதிகாரி சுபாஷ் பிரியதர்சன ஆகியோர் 04 தனித்தனி அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
உயர்த்தப்பட்ட மின்கட்டணத்திற்கு எதிராக, காலை 8.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டதாக தமது மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
எரிபொருள் நிலையங்கள் தீப்பிடித்து எரியும்
'சட்டவிரோத மின்சார சட்டத்திற்கு எதிரான பேரணி' என பெயரிடப்பட்டுள்ள இந்த பேரணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மினுவாங்கொட "ஏகல" ஜா-அல" கந்தானை" மஹாபாகே மற்றும் வத்தளை ஆகிய நகரங்களை கடந்து மின்சார அமைச்சுக்கு அருகில் வந்து தீபங்களை ஏற்றி ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தங்கள் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளதாக தெரிவித்த காவல்துறை அதிகாரிகள், போராட்டக்காரர்களின் தீப்பந்தங்களால் எரிபொருள் நிலையங்கள் தீப்பிடித்து எரிய வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் பெரும் அழிவு ஏற்படுமெனவும் தெரிவித்தனர்.
மக்கள் பாதிக்கப்படுவர்
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு வீதி உள்ளிட்ட பிரதான வீதிகள் தடைப்படலாம் எனவும், அவ்வாறு நடந்தால் அந்த வீதிகளைப் பயன்படுத்தும் அமைதியான மக்கள் பாதிக்கப்படுவதுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதுடன் தேசிய பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, சசுன ரக்குமே குளோபல் மன்றத்தின் அழைப்பாளர் பலாங்கொட காஷ்யப தேரர், மின்சார பாவனையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க, தேசிய பிரஜைகள் சங்கம் மற்றும் ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ள சகல மக்களுக்கும் இந்த பேரணியை நடத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவல்துறையின் கோரிக்கை நிராகரிப்பு
முன்வைக்கப்பட்ட மனுக்களை பரிசீலித்த நீதவான்,மக்களின் பேச்சு சுதந்திரத்தை தடைசெய்யமுடியாது என தெரிவித்தார். காவல் நிலைய பொறுப்பதிகாரிகளால் கோரப்பட்ட இந்த உத்தரவு, அரசியல் சாசனத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ள பொதுமக்களின் நடமாட்டம், பேச்சு, ஒன்றுகூடல் சுதந்திரத்திற்கு நேரடியான முரண்பாடானது என சுட்டிக்காட்டிய நீதவான், காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
