வெளிநாடுகளில் கொரோனா தொற்றால் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர் உயிரிழப்பு
வெளிநாடுகளில் தொழிலுக்காக சென்ற இலங்கையர்களில் 122 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டதாகவும் 4422 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் தொழிற்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று முன்தினம் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலவதுவல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தொற்றுநோயால் 56,403 இலங்கை தொழிலாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளதாகவும், 30,832 பேர் வேலை இழந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கைக்கு திரும்ப முடியாதவர்களின் நலனுக்காக வெளியுறவு அமைச்சகம் இதுவரை ரூ .92 மில்லியன் செலவிட்டுள்ளது.
இலங்கைக்கு திரும்ப முடியாமல் போன இலங்கையர்களை மீண்டும் அழைத்துவரும் செயற்பாடு அடுத்த சில நாட்களில் தொடங்கும் என்றும், 600 க்கும் மேற்பட்ட ஹோட்டல் அறைகள் அவர்களது தனிமைப்படுத்தலுக்காக இலவசமாக தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.