முடக்கப்பட்ட பிரதேசத்திற்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு அரசிடம் கோரிக்கை
கிண்ணியா பிரதேசத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக முடக்கப்பட்ட மாஞ்சோலை கிராம மக்களுக்கு அரச கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் என மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகர சபையின் உறுப்பினருமான எம் .எம். மஹ்தி அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று கிண்ணியா பிரதேசத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்தும் செவ்வி வழங்கிய அவர், கடந்த 8 நாட்களாக முடக்கப்பட்டிருக்கும் இப்பிரதேசத்தில் 857 குடும்பங்களை சேர்ந்த 3187 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
அன்றாடம் தொழில் செய்வதன் மூலம் தங்களுடைய ஜீவனோபாயத்தை தேடிவந்த நிலையில் தொழிலை இழந்து நிர்க்கதியாகி பட்டினியால் வாடும் இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர தேவைகளான பால்மா, மருத்துவ செலவுகள், போன்ற இன்னோரன்ன செலவுகளுக்கு எந்தவித வருமானமும் இன்றி அவதியுறுகின்றார்கள்.
தொடர்ந்தும் கஷ்டங்களை அனுபவிக்கும் இவர்களுக்கு கட்டுப்பாடுகளை இழப்பதற்கு முன்னரே அரசினால் வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகளான 5000/- ரூபாவினையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருந்த குடும்பங்களுக்கான 10000/- ரூபாவையும் உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கையினை அரசாங்கமும் அதிகாரிகளும் எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.