கொரோனாவைக் கட்டுப்படுத்த புதிய குழு நியமனம்
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்வதற்கென வைத்திய நிபுணர் குழு ஒன்றை ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நியமித்துள்ளார்.
இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளுக்கு அமைய கொரோனா நோயைக் கட்டுப்படுத்த மருந்துகள், புதிய சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளை தயாரிக்க சுகாதார அமைச்சு விரைவில் உத்தரவிடும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் தீவிரமடைந்துவரும் நிலையில், அதனை சமாளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கென வைத்தியர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, வைத்தியர் ஹசிதா திசேரா மற்றும் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோரை உள்ளடக்கிய வகையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
உலகளவில் சர்வதேச ஔடத ஒழுங்குமுறை நடைமுறைகளுக்கு ஏற்ப மருந்துகள் தயாரிக்கப்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இந்தக் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனடாவில் தயாரிக்கப்பட்ட இன்ஹேலர், தற்போது பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா வைரஸ்சின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மருந்தொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்றுக்கு மருந்து ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இவை உள்ளிட்ட வேறு மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.