இலங்கையில் கடந்த நான்கு நாட்களாக எவருக்கும் போடப்படாத கொவிட் தடுப்பூசி
இலங்கையில் ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை முதல் கொவிட் தடுப்பூசி எவருக்கும் போடப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 10 சனிக்கிழமையன்று இலங்கையில் 66 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது, ஆனால் அதன் பின்னர் எவருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை என்று நேற்று இரவு 8.30 மணிக்கு சுகாதார அமைச்சு வெளியிட்ட கொவிட் தொடர்பான நாளாந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 925,242 பேருக்கும் இலங்கையில் வசிக்கும் 2,469 சீனர்களுக்கும் இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, இந்த மாத தொடக்கத்தில் தடுப்பூசி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி தொடர்ந்து வழங்குவதாகவும், மருத்துவ அடிப்படையில் தடுப்பூசி தேவைப்படுவதாகவும் தெரிவித்து தடுப்பூசி நிறுத்தப்படுவது தொடர்பான தனது முடிவை அடுத்த நாள் அரசாங்கம் மாற்றியது.
முதல் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை முதல் அஸ்ட்ரா-ஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் இருந்து தடுப்பூசி வருவதில் தாமதம் ஏற்பட்டதால் இலங்கையின் தடுப்பூசி திட்டம் தடைப்பட்டுள்ளது.