கந்தையா பாஸ்கரனின் வழிகாட்டலில் உச்சம் தொட்ட முன்னாள் போராளி..! ஆறாவது ஆண்டில் கால் பதிக்கிறார்
பிரபல தொழிலதிபரும், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டலில் உருவான Crafttary கைப்பணி தொழிற்சாலை இன்று ஐந்தாம் ஆண்டு நிறைவை எட்டியிருக்கிறது.
யாழ் - கோப்பாயில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவும், விருது வழங்கல் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மதிப்பு மிக்க விருந்தினராக கந்தையா பாஸ்கரன் கலந்து சிறப்பித்துள்ளார்.
பின்னணி
இந்தக் கைப்பணித் தொழிற்சாலையை சுரேஸ்குமார் (குயிலின்பன்) எனும் முன்னாள் போராளியே நடத்தி வருகின்றார்.
முள்ளிவாய்க்கால் ஒரு இனத்தின் நம்பிக்கைகள் அத்தனைக்குமே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக எம்மில் பலர் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அந்தப் பெரிய அலையில் எதிர்நீச்சல் போட்டு போராடி இன்று வெற்றியின் உச்சம் தொட்டு நிற்கின்ற சுரேஸ்குமார் பலருக்கும் ஒரு உன்னத உதாரணம்.
யாழ்ப்பாணம், கோப்பாயில் குயிலின்பனின் crafttary என்ற கைப்பணித் தொழிற்சாலையில் சர்வதேச தரத்திலான கைவினைப் பொருட்கள், தமிழ் மன்னர்களின் பெயர்களிலான தொழில் கூடங்கள், அழகு தமிழில் அறிவித்தல் பலகைகள், தான் கற்றதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் பயிற்சிக்கூடங்கள் - என்பன உள்ளன.
எந்தச் சூழலுக்குள்ளும் தன்னைத் தகவமைத்துக்கொண்டு வாழப் பயிற்றப்பட்டவன் தான் ஒரு போராளி என்ற யதார்த்தத்தை உலகுக்கு விளக்கி நிற்கும் சுரேஸ்குமார் பலருக்கு ஒரு நல்ல உதாரணம்.
கந்தையா பாஸ்கரனின் வாழ்த்துச் செய்தி
“முயற்சி, பயிற்சி, ஒழுக்கம், நேர்மை இவையெல்லாம் ஒரு மனிதனை எப்படி வெற்றிசிறக்கவைக்கும் என்பதற்கு சகோதரர் சுரேஸ்குமார் ஒரு சிறந்த உதாரணம்.
யுத்தத்தால் ஒரு இனமே முழுவதுமாக அழிந்து, அந்த இனத்தின் ஒட்டுமொத்தக் கனவுகளும் எரிந்து சாம்பலாகிவிட்டிருந்த ஒரு இக்கட்டான தருணத்தில், சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்த பீனிக்ஸ் பறவை போல பறந்து உச்சம் தொட்ட ஒருவர்.
முன்னாள் போராளியான இவரை நான் முதன்முதலில் சந்தித்த போதே, இனம் சார்ந்த இவரது பற்றை இவரது கண்களில் கண்டேன்.
'உங்களுக்கு நான் உதவுகின்றேன். உங்களைப்போன்ற இன்னும் பலருக்கு நீங்கள் உதவுவீர்களா' என்று கேட்டேன். 'கண்டிப்பாகச் செய்வேன் அண்ணா... அதுதான் எனது இலட்சியமும் கூட..' என்று பதில் வழங்கினார்.
தன்னுடைய முயற்சியால் அவர் வானில் பறக்க ஆரம்பித்தபோதும் சரி, இன்னும் இன்னும் உயரப் பறந்தபோதும் சரி, தன்னுடன் பல இளைஞர்களை அணைத்து இணைத்துக்கொண்டுதான் அவரது பயணம் இருந்தது - இருக்கின்றது.
எத்தனை உயரப் பறந்தாலும், 5 வருடங்களின் முன்பு நான் அவரில் கண்ட தாழ்மை இற்றைவரைக்கும் கொஞ்சம் கூட அவரில் குறைவில்லை.
இன்னும் பலவருடங்கள் கடக்கவும், மேலும் மேலும் உயரவும், நூற்றுக்கணக்கான எமது சந்ததியினருக்கு ஒரு தூணாக தொடர்ந்து சிறக்கவும் சகோதரர் சுரேஷை மனதார வாழ்த்துகிறேன்”
இவ்வாறாக, எமக்காக அற்பணிக்க முன்வந்த யாரையும் நாம் தலைகுனியவிடக்கூடாது என்று கங்கணம் கட்டியபடி, குயிலின்பன் போன்ற பலருக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறார் பிரபல தொழிலதிபரும், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன்.
யாழ்ப்பாணம் செல்லும் உறவுகள் முடிந்தால் ஒருதரம் கோப்பாயில் உள்ள crafttary தொழிற்சாலைக்கும் சென்று வாருங்கள்.
அங்கு ஒரு முன்னாள் போராளியின் ஓர்மத்தை நீங்கள் கண்ணாரக் கண்டு ரசிக்கலாம்.