சர்வதேசத்தில் மோசமான நிலையை உருவாக்கும் -கோட்டாபய அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சுயாதீன நிறுவனமான ஸ்ரீலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு அரசியல்வாதி ஒருவரை நியமிப்பது நாட்டிற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சர்வதேச மட்டத்தில் மோசமான எண்ணப்பாட்டை தோற்றுவிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
நாட்டில் பண மோசடியை அனுமதிக்கும் சட்டங்கள் உருவாக்கப்பட்டு, அரசியல்வாதி ஒருவர் மத்திய வங்கியை கையகப்படுத்துவதன் ஊடாக இலங்கையானது கறுப்பு பொருளாதார நாடாக கருதப்படுவதை தவிர்க்க முடியாது என முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
கிரேக்க பிணை விவகாரம், ஹெட்ஜிங் உடன்படிக்கை மற்றும் அமெரிக்காவில் நாட்டின் நன்மதிப்பை உயர்த்தும் திட்டங்கள் ஊடாக மில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் அஜித் நிவாட் கப்ராலுக்கு சர்வதேச மட்டத்தில் உள்ள நன்மதிப்பு இழக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அஜித் நிவாட் கப்ரால் போன்றவர்கள் நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படும் போது, நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மிகவும் மோசமான விம்பமே உருவாகும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.