தன்னைப் புனிதராக்கி கொள்ள முயற்சிக்கும் அர்ச்சுனா! ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தன் மீதான விமர்சனங்களை மறைத்து, தன்னைத் புனிதராக்கி காட்டிக் கொள்ளவே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
யாழ். ஊடக மையத்தில் நேற்று (30.04.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஈ.பி டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் மானிப்பாய் பிரதேச அமைப்பாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர்.
இதன் போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “அர்ச்சுனாவுடன் காணித் தகராறில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் தமது கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்
தன்னை தியாகிகளாக்குவதற்கும் யாரெல்லாம் விரும்புகின்றார்களோ, அவர்கள் கையில் எடுக்கின்ற இலகு வழிமுறைதான், ஈ.பி.டி.பி. க்கு எதிரான விமர்சனங்களே நீண்ட வரலாறாக இருக்கின்றது.

அந்த அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனும், 2023 ஆம் ஆண்டு எமது செயலாளர் நாயகத்துடனான உரையாடலின் ஒரு பகுதியை வெளியிட்டிருந்தார்.
மேலும், உண்மையிலேயே குறித்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம், பிரதேச அமைப்பாளர் ஊடாக விசாரித்து எமது கட்சி உறுப்பினர்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதுடன், சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே தனக்கு எதிரான விமர்சனங்களை மறைப்பதற்கு பழைய உரையாடலை வெளிப்படுத்தி தவறான கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
இருப்பினும், இராமநாதன் அர்ச்சுனாவின் கருத்துக்கள், ஈ.பி.டி.பி. அதிகாரத்தில் இருந்த காலங்களில் கூட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது இல்லை.
ஆயுதங்களை அப்பாவிகளை மிரட்டுவதற்கு பயன்படுத்தியது இல்லை என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது“ என மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |