அரசுக்குள் வலுக்கும் நெருக்கடி -கோட்டாபய மகிந்த முக்கிய பேச்சு
அரசாங்கத்திற்குள் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும்(Gotabaya Rajapaksa) பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் (Mahinda Rajapaksa) இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக உர நெருக்கடி உள்ளிட்ட பல நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருந்ததுடன் தற்போது அரசாங்கத்தினுள்ளேயே எதிர்ப்பை எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக உள்ளது.
அரசாங்கத்தின் கூட்டாளிகள் அரசாங்கத் தலைவர்களுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருவதுடன், தற்போது அரச தலைவரையும் அரசாங்கத்தையும் பகிரங்கமாக விமர்சிக்கும் அளவிற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர (Dew Gunasekara)அண்மையில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்ததுடன், அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருக்க முடியாது என வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara) தெரிவித்திருந்தார்.
இந்த விமர்சனங்கள் தொடர்பில் பிரதமர் அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa)மற்றும் பலருடன் கலந்துரையாடியுள்ளதுடன் அரச தலைவரை சந்திப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.
யுகதனவி உடன்படிக்கைக்கு பங்காளிக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் உரத்தடையை பகிரங்கமாக விமர்சித்துள்ளனர்.