அம்பாறையில் கனமழை : பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
புதிய இணைப்பு
அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று (25) முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள் மற்றும் கரையோர பிரதேசங்களை அண்டி வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சீரற்ற காலநிலை காரணமாக கல்முனை, நாவிதன்வெளி, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், இறக்காமம், உகண ஆகிய 10ற்கும் மேற்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 10,000ற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் வெள்ள நீர் பரவலால் கிட்டங்கி மற்றும் மாவடிப்பள்ளி வீதி நீரில் மூழ்கியதனால் போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளதுடன் சம்மாந்துறை பிரதேச செயலகத்தையும் காரைதீவு பிரதேச செயலகத்தையும் இணைக்கின்ற மாவடிப்பள்ளி பாலமும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இதனூடாக போக்குவரத்து செய்யும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்ற நிலையில் இலங்கை கடற்படை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச செயலகம் ஆகியன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதேவேளை சில இடங்களில் பல நாட்களாகப் பெய்து வரும் மழையினால் அதிகமான மழை நீர் ஓட்டமில்லாமல் வயல் பகுதிகளில் தேங்கி நிற்பதனால் நெற் பயிர்கள் அழுகும் நிலைக்குள்ளாகியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கிறனர்.
கழிவு நீர் வாய்க்கால்களை நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாயிகளும் கவனம் செலுத்தி புனரமைக்கப்படாமையால் விதைக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அழிவு எற்பட்டு வருவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பல கிராமப் புறங்களில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்தும் சூழ்ந்தும் காணப்படுவதால் பலர் தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி வாழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
அம்பாறை (Ampara) மாவட்டம் - காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் வெள்ள நீரில் இறந்த நிலையில் முதலைகள் கரை ஒதுங்கியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குறித்த முதலைகள் இன்று (25) இறந்து கரையொதுங்கியமை அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் அண்மைக்காலமாக பல முதலைகள் காணப்பட்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இறந்த முதலைகள்
அத்துடன் இப்பாலத்தை அண்டிய பகுதிகளில் சுமார் 30ற்கும் அதிகமான முதலைகள் காணப்பட்ட போதிலும் தற்போது 10 முதல் 15 வரையிலான முதலைகளே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
தற்போது அங்கு பெய்துவரும் அடைமழை காரணமாக சுமார் 7 அடி முதல் 9 அடி வரையான முதலைகள் இறந்த நிலையில் நீரில் மிதந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியினால் பொதுமக்கள் சிரமத்துடன் பயணம் செய்வதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |












