தகெஸ்தான் விமான நிலையத்தில் பரபரப்பு : இஸ்ரேலை பகிரங்கமாக எதிர்க்கும் ரஷ்ய மக்கள்
இஸ்ரேலில் இருந்து விமானம் வருவதை எதிர்த்து ரஷ்யாவின் தகெஸ்தான் பிராந்தியத்தில் உள்ள பிரதான விமான நிலையத்திற்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (29) தகெஸ்தான் விமானநிலையத்தின் ஓடு பாதைக்குள் நுழைந்த மக்கள் யூத எதிர்ப்பு கோசங்களை எழுப்பி கலவரத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து விமானத்தில் வந்த இஸ்ரேல் பயணிகளைக் குறிவைத்தே இந்த கலவரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
யூத எதிர்ப்பு போராட்டங்கள்
இந்த கலவரத்தில் பங்குபற்றிய மக்களில் சிலர் பலஸ்தீன கொடிகளை தாங்கியிருப்பதையும், யூத எதிர்ப்பு கோசங்களை எழுப்புவதையும், இஸ்ரேல் பயணிகளை அடையாளம் காண அவர்களின் கடவுச்சீட்டுகளை சோதிப்பதனையும் இந்த கலவரம் தொடர்பாக வெளியாகியுள்ள காணொளிகளில் காணமுடிகிறது.
ரஷ்யாவின் தகெஸ்தானில் நடக்கும் இந்த யூத எதிர்ப்பு போராட்டங்களை அமெரிக்கா கடுமையாக கண்டிப்பதாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்யாவில் இஸ்ரேலிய மக்களுக்கான பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதால் அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு இஸ்ரேல் ரஷ்ய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்கள் ரஷ்யாவில் பாதுகாப்பாக இருக்க ரஷ்யாவிற்கான இஸ்ரேலிய தூதர் ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் நெதன்யாகுவின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.