ஜி 77 உச்சிமாநாட்டில் பங்கேற்க ரணிலுக்கு அழைப்பு
கியூபாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 77 மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான கியூபா தூதுவர் ஆண்ட்ரேஸ் மார்செலோ கோன்சாலஸ் (Andrés Marcelo González) இந்த அழைப்புக் கடிதத்தை ரணில் விக்ரமசிங்கிடம் கையளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரணிலுக்கு அழைப்பு
கியூபாவில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 15 ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் ஜி77 மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளது.
பொருளாதார வளர்ச்சியின் தற்போதைய சவால்கள் மற்றும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு எனும் தலைப்பின் கீழ் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்குமாறு கியூபா அதிபர் மிகேல் டியாஸ் கேனல் (Miguel Díaz-Canel) சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கியூபாவின் தலைமையில்
இந்த அழைப்பு தொடர்பான கடிதத்தை இலங்கைக்கான கியூபா தூதுவர் ஆண்ட்ரேஸ் மார்செலோ கோன்சாலஸ் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் போது கையளித்துள்ளார்.
இந்த ஆண்டு கியூபாவின் தலைமையில் ஜி77 மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஆண்டு பாகிஸ்தான் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.