இலங்கையின் தற்போதைய நிலை -மைத்திரி விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கை தற்போது இந்த நிலையை அடைந்துள்ளமைக்கு நாட்டை ஆட்சி செய்த சகலரும் பொறுப்பு கூற வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது எதிர்க்கட்சியினர் என்ன செய்கின்றனர் என தெரியவில்லை. நாளைய தினமே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற அடிப்படையில் எரியும் தீயில் மேலும் எண்ணெய் ஊற்ற நாம் தயாரில்லை. எமக்கும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள முடியும். எனினும், அதனூடாக நாடு மேலும் வீழ்ச்சியடையும்.
சர்வ கட்சி மாநாட்டில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என நாம் பரிந்துரைத்துள்ளோம். நாட்டில் எந்த அரசியல் தலைவர்களும் விளக்கமறியலில் வைக்கப்படவில்லை. சோதனைகள் மற்றும் விசாரணைகளை மாத்திரம் மேற்கொள்கின்றனர்.
தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நாடு மேலும் வீழ்ச்சி பாதையிலேயே செல்லும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
