காங்கேசன்துறை ஊடாக தங்கம் கடத்த முயன்ற இந்தியர்கள் கைது
இலங்கையில் இருந்த இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தங்கம் கடத்த முயற்சித்த இந்தியப் பிரஜைகளை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
காங்கேசன்துறை ஊடாக இன்று நாகப்பட்டினம் செல்லத் தயாராக இருந்த 19 இந்தியப் பயணிகளை இலங்கை சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்த நிலையில் இந்த கடத்தல் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதன்படி தடுத்து நிறுத்தப்பட்டவர்களிடம் 7 பேரிடமிருந்து இதுவரை தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுங்க அதிகாரிகள் விசாரணை
ஏனையோரிடம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய ஸ்கானிங் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

சந்தேகநபர்கள் கடந்த 24ஆம் திகதி கொழும்பு ஊடாக இலங்கைக்கு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், தங்கத்தை உடலுக்குள் அல்லது வேறு நூதனமான முறையில் மறைத்து இந்தியாவுக்கு கடத்த முயன்றார்களா என்பது குறித்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.