இந்திய அமைதிப்படை நகர்வை நேரில் அனுபவித்த ஜெய்சங்கருக்கு ஆச்சரியம் அளித்த இலங்கை மக்கள்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் கடந்த பல தசாப்தங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சுட்டிக்காட்டும் வகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கையர்கள் இந்தியாவை நோக்கும் விதம் தொடர்பான சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவை குறிப்பிடத்தக்கதாகக் கூறியிருந்தார்.
அமெரிக்காவை தளமாக தளமாகக் கொண்ட Pew Research Center மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில், இலங்கையர்களில் 79% பேர் இந்தியா குறித்து சாதகமான பார்வையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை தம்மை ஆச்சரியப்படுத்தியதாக ஜெய்சங்கர் இதன்போது தெரிவித்திருந்தார்.
இந்தியாவுக்கு எதிரான அரசியல் பிரசாரங்கள்
ஒரு கால கட்டத்தில் இலங்கையில் இந்திய உயர் ஆணையகத்தில் பணியாற்றிய ஜெய்சங்கர், இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தின் சூழ்நிலைகளை நேரில் அனுபவித்தவர் என்றே சொல்லியாகவேண்டும்.

அந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான அரசியல் பிரசாரங்களும் தாக்குதல் சம்பவங்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.
அந்தப் பின்னணியை நினைவுகூர்ந்த ஜெய்சங்கர், “79% இலங்கையர்கள் இந்தியாவை சாதகமாகப் பார்க்கிறார்கள் என்ற எண்ணிக்கை எனக்கு ஆச்சரியத்தைத் தாண்டிய ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
1987ஆம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கையில் இந்திய எதிர்ப்பு உணர்வு தீவிரமடைந்தது. குறிப்பாக அக்காலகட்டத்தில் ஜே.வி.பி. இந்தியாவுக்கு எதிரான கடுமையான அரசியல் பிரசாரத்தை முன்னெடுத்தது.
ஆனால் பல தசாப்தங்களுக்குப் பின்னர், இந்தியாவுடன் நெருக்கமான உறவைப் பேணும் அரசியல் அணுகுமுறையுடன் இலங்கை முன்னேறி வருகிறது.
கடந்த கால அரசியல் நிலை
இதன் ஒரு வெளிப்பாடாகவே 79% சாதகமான கருத்துக்கணிப்பு முடிவு பார்க்கப்படுகிறது.

ஜெய்சங்கரின் கருத்து, கடந்த கால அரசியல் நிலைப்பாடுகளுக்கும் தற்போதைய இலங்கை மக்களின் இந்தியா தொடர்பான பார்வைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
இலங்கையில் இந்திய எதிர்ப்பு உணர்வு எப்போதும் பொதுமக்களின் நிலையான மனநிலையின் நேரடி வெளிப்பாடாக இருந்ததா அல்லது குறிப்பிட்ட அரசியல் சூழ்நிலைகளில் அரசியல் சக்திகளால் தீவிரப்படுத்தப்பட்டதா என்ற கேள்வியையும் தற்போதைய நிலை எழுப்புகிறது.
கடந்த காலங்களில் இந்தியாவை எதிர்க்கும் அரசியல் பிரசாரங்கள் பல்வேறு தருணங்களில் வலுப்பெற்றிருந்தாலும், தற்போதைய கருத்துக்கணிப்பு இலங்கை மக்களிடையே இந்தியாவுக்கு கணிசமான அளவில் நல்லெண்ணம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
அதேவேளை, இந்தியாவின் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக இலங்கையில் அவ்வப்போது எழும் எதிர்ப்புகளையும் புறக்கணிக்க முடியாது.
முடிவுக்கு வந்த விமர்சனங்கள்
எனவே, 79% என்ற எண்ணிக்கை இந்தியா தொடர்பான அனைத்து விமர்சனங்களும் முடிவுக்கு வந்துவிட்டன என்பதைக் குறிக்காது.
மாறாக, இந்தியாவுடனான உறவைப் பற்றிய இலங்கை மக்களின் ஒட்டுமொத்த அணுகுமுறை கடந்த காலத்தை விட குறிப்பிடத்தக்க வகையில் சாதகமாக மாறியிருப்பதை காட்டுகிறது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி, பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் பங்கு கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
இந்தப் பின்னணியில், இலங்கை மக்களில் பெரும்பான்மையானோர் இந்தியாவை சாதகமாகப் பார்ப்பதாக வெளியாகியுள்ள Pew கருத்துக்கணிப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் சமூக அடித்தளத்தையும் வெளிப்படுத்துகிறது.
ஒருகாலத்தில் இந்திய எதிர்ப்பு அரசியல் இலங்கையின் முக்கியமான அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், இன்று 79% இலங்கையர்கள் இந்தியாவை சாதகமாகப் பார்ப்பதாக வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு, அந்த அரசியல் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்தும் முக்கியமான தரவாக அமைந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |