திருகோணமலையை தாக்கிய பேரனர்த்தம் : பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 25,624 குடும்பங்களை சேர்ந்த 84,812 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 214 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 25.11.2025 முதல் 2025.12.03 மாலை 03.00 மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 653 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 20,089 குடும்பங்களை சேர்ந்த 67,733 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் 46 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 4,936 குடும்பங்களை சேர்ந்த 15,285 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பல குடும்பங்கள் பாதிப்பு
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 530 குடும்பங்களை சேர்ந்த 1,860 நபர்களும், தம்பலகாமத்தில் 451 குடும்பங்களை சேர்ந்த 1,425 நபர்களும், மொறவெவவில் 139 குடும்பங்களை சேர்ந்த 432 நபர்களும், சேருவிலவில் 1,101 குடும்பங்களை சேர்ந்த 3,651 நபர்களும், வெருகலில் 1,884 குடும்பங்களை சேர்ந்த 5,616 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மூதூரில் 9,530 குடும்பங்களை சேர்ந்த 31,835 நபர்களும், கிண்ணியாவில் 5,134 குடும்பங்களை சேர்ந்த 17,013 நபர்களும், கோமரங்கடவலவில் 304 குடும்பங்களை சேர்ந்த 942 நபர்களும், பதவிஸ்ரீபுரவில் 533 குடும்பங்களை சேர்ந்த 1,802 நபர்களும், குச்சவெளியில் 5,732 குடும்பங்களை சேர்ந்த 19,255 நபர்களும், கந்தளாயில் 286 குடும்பங்களை சேர்ந்த 981 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடைப்பெடுத்த மாவிலாறு அனைக்கட்டு
மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாகவும் மகாவலி ஆற்றுப்பெருக்கெடுப்பு காரணமாகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதுடன் தற்போது நீர் மட்டம் குறைந்துள்ள நிலையில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

இதேவேளை தம்பலகாமம், கோமரங்கடவல, பதவிசிபுர, குச்சவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள இடைத்தங்கல் நிலையங்களில் இருந்தவர்கள் சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பியுள்ளதால் குறித்த பிரதேச செயலக பிரிவில் உள்ள இடைத் தங்கல் முகாம்கள் மூடப்பட்டுள்ளன.
கிண்ணியா பிரதேச செயல பிரிவில் உப்பாறு, மஜீத் நகர், பூவரசந் தீவு, சமாவச்சந்தீவு ஆகிய கிராமங்கள் நீரால் தொடர்ந்தும் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |