மிச்சாங் புயல்:வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!
மிச்சாங் புயலின் தாக்கம் தமிழர் தாயமான வடக்கு கடலோரப் பகுதிகளிலும் உணரப்படலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிவந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று(3) மிச்சாங் என்ற தீவிர புயலாக மாற்றமடைந்துள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கே 290 கிலோமீற்றர் தொலைவில் இந்தப் புயலானது மையம் கொண்டுள்ளது.
மிச்சாங் புயல்
இந்தப் புயலானது யாழ் மாவட்டத்தில் இருந்து வட கிழக்காக 125 கிலோமீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
இந்த புயலானது, வடக்கு மற்றும் வட மேற்கு கரையோரமாக நகர்ந்து, தமிழ் நாட்டின் கரையோரத்தின் ஊடாக ஆந்திரா பிரதேச கரையோரத்தை 5 ஆம் திகதி சென்றடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை
அத்துடன் யாழ் மாவட்டத்தில் மேக மூட்டத்துடனான வானிலை காணப்படுவதாகவும் 75 மில்லிமீற்றர் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் ரி.என்.சூரியராஜா கூறியுள்ளார்.
இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வெள்ளம் மற்றும் பலத்த காற்று காரணமாக மக்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழையுடன் கூடிய வானிலை நீடிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக புதிதாக 92 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குடும்பங்களை சேர்ந்த 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
நல்லூர், பருத்தித்துறை, சாவகச்சேரி, கரவெட்டி, சங்கானை ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளத்துடன் 2 வீடுகளின் உட்கட்டுமானம் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் மற்றும் கரைதுறைப்பற்று ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 65 குடும்பங்களை சேர்ந்த 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |