அரச ஊழியர்களுக்கு பேராபத்து - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர் என்ற ரீதியில் தாம் மிகுந்த மனவேதனை அடைவதாக பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல தெரிவித்துள்ளார்.
எனினும் விலையை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களுக்கு எட்டாத வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய போதிலும், தெற்காசியாவிலேயே இலங்கையில் எரிபொருள் விலை குறைந்துள்ளதாகவும் எல்லாவல மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லுமாறு பரிந்துரைக்கும் பலர் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லும் போது எதிர்நோக்கும் நிலைமைகள் குறித்து எதுவும் கூறுவதில்லை என எல்லாவல சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கினால் அரச ஊழியர் குறைப்பு போன்ற நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் எனவும், அரச சேவை நலிவுற்றல் போன்ற நிபந்தனைகளுக்கு இணங்கி கடன் பெற தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே அரச ஊழியர்களைப் பாதுகாக்கவே சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.