அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு ஆபத்து!! எச்சரிக்கையுடன வந்த தகவல்
இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பொது சுகாதார பிரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ள நிலையில், சுகாதார அமைச்சு அதற்கு மாறான கருத்தை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்திற்குள்ளேயே தொற்று தொடர்பான மாறுபட்ட கருத்துக்கள் நிலவும் நிலையில், கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வார இறுதி மற்றும் விடுமுறை காலங்களில் மக்களின் கவனக்குறைவான நடத்தை காரணமாக ஒமைக்ரோன் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அடுத்த இரண்டு வாரங்களில் தொற்று எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். "தற்போது, ஒமைக்ரோன் சமூகத்தில் பரவத் தொடங்கியதால், சிந்தப்பட்ட பாலுக்காக அழுவது பொருத்தமற்றது," என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொற்று எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க எழுச்சி தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டதாகவும் உப்புல் ரோஹண கூறியுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா தொற்று தற்போது நாட்டில் கட்டுப்பாட்டில் உள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.
ஏனைய கொரோனா விகாரங்களை விட ஒமைக்ரோன் குறைவான செயற்றிறன் கொண்டது என்பதை சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியிருந்தாலும், இறப்பு எண்ணிக்கை குறைவதாக குறிப்பிட்டார்.
வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைகின்றமையே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் தொடர வேண்டும் என்று அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற கொரோனா தொற்றை தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நேற்று கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 600ஐத் தாண்டிய நிலையில், திடீரென அதிகரித்துள்ள தொற்று குறித்து தாம் மிகவும் கவலையடைவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், கொரோனா தொற்று விபரங்களை மாற்றவோ அல்லது மறைக்கவோ எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.