சடலங்கள் மாறியதால் ஏற்பட்ட பதற்றம் - பாணந்துறை வைத்தியசாலையில் சம்பவம்
பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 2 சடலங்கள் மாறுபட்டுள்ளமையினால் குறித்த விவகாரம் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
அண்மையில் பாணந்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 89 மற்றும் 93 வயதுடைய இரண்டு பெண்கள் உயரிழந்துள்ளனர். இவர்களில் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய முஸ்லிம் பெண் கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவரது சடலத்திற்கு பதிலாக பாணந்துறை பகுதியை சேர்ந்த 93 வயதுடைய பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு குறித்த சடலம் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உயிரிழந்த மற்றைய பெண்ணின் உறவினர்கள் சடலத்தை எடுத்துச் செல்ல வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர். இதில், பாணந்துறை வீரசிங்க மாவத்தை சேர்ந்த 93 வயதுடைய பெண்ணின் இறுதிக்கிரியைகளுக்காக அவரது உறவினர்கள் பாணந்துறை வைத்தியசாலைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் குறித்த சடலம் அங்கிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து குறித்த பகுதியில் சற்று நேரம் பதற்றமான நிலை ஏற்பட்டிருந்ததாகவும், இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.