நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரண தண்டனை : வெளியான கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காவல்துறை சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள பிரதிகாவல்துறைமா அதிபர் நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு (Nilantha Jayawardene) மரணதண்டனை வழங்கவேண்டும் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடில்லை என கொழும்பு மறைமாவட்டத்திற்கான தகவல் தொடர்பு இயக்குநர் அருட்தந்தை சிரில் காமினி பெர்ணாண்டோ (Cyril Gamini Fernando) தெரிவித்துள்ளார்.
இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் மக்கள் தொடர்பு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காவல்துறை சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜூட் தனது தனிப்பட்ட கருத்தினையே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை.
உயர்நீதிமன்ற உத்தரவு
இலங்கை கத்தோலிக்க திருச்சபையும், உலகளாவிய திருச்சபையும் மரணதண்டனையை ஏற்றுக்கொள்வதில்லை. 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே நிலாந்த ஜெயவர்த்தன பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணையின் மூலம் மேலும் பல விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கின்றோம்.
சிஐடியின் இயக்குநர்
சிஐடியின் இயக்குநராக ஷானி அபயசேகரவையும் (Shani Abeysekera), பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவிசெனவிரட்னவையும் (Ravi Seneviratne) நியமிக்கவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
2020இல் பதவிஇடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளை மீண்டும் பணிக்கு அமர்த்தவேண்டும், என்பதே கர்தினாலின் விருப்பம் அவர் பெயர் எதனையும் குறிப்பிடவில்லை” என சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
