நாடாளுமன்றில் இன்று பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம்
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்காக நாடாளுமன்றம் இன்று (10) கூடுகின்றதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை 09.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று விவாதிக்கப்படவுள்ள வரி திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் தற்போது விதிக்கப்பட்டுள்ள 15 சதவீத வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய உணவுப் பொருட்களுக்கும் வரி
மேலும், இதுவரை வற் வரிக்கு உட்படாத சில துறைகளும் இந்த திருத்தத்தின் ஊடாக வற் வரிக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னர் வற் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட விவசாய இயந்திரங்கள் மற்றும் இரசாயன உரங்கள் உள்ளிட்ட இதர உபகரணங்களுக்கும் வற் வரி விதிக்கப்படவுள்ளது.
இலங்கையில் பயிரிடப்படும் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் "ஊட்டச்சத்து" வகையைச் சேர்ந்த அதிக புரதம் மற்றும் ஆற்றல் கொண்ட விவசாய உணவுப் பொருட்களும் வற் வரிக்கு உட்படுத்தப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணங்களுக்கு வற் வரி விதிக்கப்படாது
மருத்துவ உபகரணங்கள், நோயாளர் காவு வண்டி , பெற்றோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவையும் இந்த வரிக்குள் உட்படுத்தப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.
எனினும், மின்சாரக் கட்டணங்களுக்கு வற் வரி விதிக்கப்படாது என்பதுடன் இறக்குமதியின் போது விதிக்கப்பட்ட துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி, பெற்றோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றிலிருந்து நீக்கப்படவுள்ளது.
திரவ பால் மற்றும் முட்டை போன்ற பால் பொருட்களுக்கும் புதிய வற் விதிக்கப்படும் எனவும், கோதுமை, பால் மா, மருந்து உற்பத்தி பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு புதிய வரி திருத்தத்திலிருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |