கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுறுத்த திட்டம்
இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம்
இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் உள்ளிட்ட வரப்பிரசாதங்கள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் இருக்கும் வெற்றிடங்களை இனங்கண்டு அவற்றை நிரப்புவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு அதிபர் இரு தரப்பினருக்கான கலந்துரையாடலின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வருடாந்தம் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் தற்போதுள்ள கல்வி வசதிகள் போதுமானதாக இல்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிதி ஒதுக்கீட்டு வரம்பு
தற்போதைய நிதி ஒதுக்கீடு வரம்புகளை முகாமைத்துவம் செய்து பல்கலைக்கழகக் கட்டமைப்பின் வசதிகளை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்குமான கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மருத்துவ, பொறியியல் மற்றும் விஞ்ஞான பீடங்களின் வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துமாறும் அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
