குருந்தூர் ஆதி ஐயனார் ஆலய அமைவிடத்தில் குருந்தாசேவ விகாரை சிதைவுகள்- பறிபோகும் தமிழர் வழிபாட்டு நிலங்கள்!
இந்து மதத்தின் பெயரால் பல அமைப்புகள் உள்ள போதும் தற்போதைய சூழ்நிலையில் அவை பெயரளவில் மாத்திரம் தான் அமைப்புகளாக உள்ளன. இனநலன் சார்ந்து ஏவ்வித செயற்பாடுகளையும் செய்வதாக தெரியவில்லை என்று சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு குருந்தூர் ஐயனார் ஆலய அழிப்பு தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அண்மைக் காலமாக எமது வழிபாட்டுத் தலங்கள் பலவற்றை நாம் இழந்து கொண்டிருக்கின்றோம்.
அதனுடைய தொடராக பல வருடங்களாக முல்லைத்தீவு மாவட்டம் குமுளமுனை, தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டு வந்த கிராமிய வழிபாட்டோடு ஒன்றிய ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்து எறியப்பட்டு புத்தர் சிலை கொண்டு வரப்பட்டு பௌத்த வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுளன.
இது அனைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் மிக வேதனையான செயலாக பார்க்கப்படுகிறது. தொடர்பே இல்லாத இடங்களில் புதிது புதிதாக இவ்வாறான செயல்களை செய்வது திட்டமிட்ட செயலாகவே எண்ணத்தோன்றுகின்றது. தற்போது ஏதோ குருந்தாசேவ பௌத்த விகாரையின் சிதைவுகள் உள்ளதாக இராணுவத்தின் ஆதரவோடு தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.
தற்போது புத்தர் சிலை ஒன்று குருந்தூர்மலை பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அகழ்வாராச்சிப் பணி என்ற பெயரில் ஆரம்பித்துள்ளனர். அகழ்வாராச்சிக்கு புத்தபகவான் வர வேண்டிய தேவை என்ன இருக்கின்றது. ஆக ஒட்டு மொத்தமான தமிழர் வழிபாட்டு நிலங்கள் பறிபோய்க்கொண்டே இருக்கின்றன. எமது வழிபாட்டுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
இதை அனைத்தினையும் கண்டும் காணாதது போல் கடந்து செல்கின்றனர் அரசியல்வாதிகளும் ஆன்மீகவாதிகள், ஆன்மீக அமைப்புகளும். அவர்கள் பெயரளவிலேயே மட்டுமே அமைப்புகளாக இருக்கின்றனவே அன்றி இனமத நலன்களை கருத்தில் கொள்வதாக தெரியவில்லை. ஜனாதிபதியின் கௌரவச் செயலாளர்கள் சர்வமதப் பேரவையில் இருப்பவர்கள் என்று பலர் இருக்கின்றனர். அவர்கள் இனமத நலன்கள் பற்றி எந்த விதமான நடவடிக்கைகளையும் செய்யவதாக தெரியவில்லை என்பதே உண்மை.
அந்த பதவிகள் தமக்கு கௌரவம் என்று நினைக்கின்றனர். ஆக இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒன்றிணைந்து இனமத நலன்களை காப்பாற்ற வேண்டுமே தவிர கடந்து போக நினைக்க கூடாது. ஏனெனில் நாளை அது பல இடங்களுக்கும் வரலாம்.
விழிக்கும் வரை அழிப்புகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். அனைத்தையும் இழந்த பின்னர் சிந்திப்பதில் பலனில்லை எனவே இவ்விடயத்தில் உங்கள் எதிர்ப்புகளை வெளியிட வேண்டிய தேவையுள்ளது என்பதை உணருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.