இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புகின்ற தீர்மானம் ஏற்புடையதல்ல : கலிலூர் ரஹ்மான்
இலங்கையில் நிலவி வருகின்ற டொலர் பிரச்சினைக்கு தீர்வினை எட்டுவதற்கு இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புகின்ற தீர்மானம் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என அதிபர் செயலணி முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் தெரிவித்தார்.
இஸ்ரேல் - பலஸ்தீனம் பிரச்சினை மிக பாரிய உலக நெருக்கடியாக தாண்டவமாடிக்கொண்டிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்
இறந்த இலங்கையர்களின் உடல்கள்
“இஸ்ரேலியர்களின் கட்டுப்பாட்டு பிரதேசம் தற்போது பாரிய இரும்புக் கோட்டை போல் உள்ளது. முன்பு இஸ்ரேலியர்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு சென்று அங்கு வேலை பார்த்த பலஸ்தீனர்களுக்கு இப்போது அனுமதி மறுக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாகவே இலங்கையர்களை பணிக்கு அமர்த்தவே இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேலில் இறந்த இலங்கையர்களின் உடலங்கள் சில ஏற்கனவே நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை சிறியளவில் பதற்றத்தை ஏற்படுத்த செய்தன.
ஆனால் கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட நேருமானால், மிக மிக மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட்டுவிடும்.
மொசாட்டின் திட்டம்
இஸ்ரேலிய உளவுப் படையான மொசாட் திட்டமிட்ட வகையில் இலங்கையில் மிக பாரதூரமான நெருக்கடியை உருவாக்கி ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கின்றதா என்கிற சந்தேகமும் எமக்கு உள்ளது.
மேற்கத்தேய நாடுகளின் ஆசிர்வாதத்துடன் மொசாட்டின் கழுகு பார்வை இலங்கை மீது விழுந்திருக்கிறது என்று சந்தேகிக்கின்றோம்.
எனினும் அதிபர் ரணில் விக்ரமசிங்க பூகோள அரசியலை கரைத்துக் குடித்தவர். அவருக்கு இவற்றை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று கிடையாது. ஆனால், நாட்டுப் பற்றாளர் என்ற வகையில் அவருடைய மேலான கவனத்தை நாம் கோரி நிற்கின்றோம்.
இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புகின்ற தீர்மானத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |