சபாநாயகருக்கு எதிராக வெடித்த சர்ச்சை : ஜெனீவாவில் முறைப்பாடளிக்க தீர்மானம்
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் (Jagath Wickramaratne) முறையற்ற செயற்பாடுகள் குறித்து சுவிஸர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள நாடாளுமன்ற குழுக்களுக்கிடையிலான ஒன்றியத்திடம் முறைப்பாடளிப்பதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு சபாநாயகரால் நியாயமான காலம் வழங்கப்படாமை உட்பட முக்கிய காரணிகளை சுட்டிக்காட்டி குறித்த முறைப்பாடளிக்கப்படவுள்ளது.
குறித்த விடயத்தினை எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக (Gayantha Karunathilaka) தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச உரையாற்றுதல்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகளின் கட்சி தலைவர்கள் கூடிய போது சில விடயங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டு அதனை சபாநாயகரிடம் கையளிப்பதாகும்.
அடுத்தது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றும் போது ஆளுந்தரப்பினரால் இடையூறு ஏற்படுத்தப்படுவதோடு, சபாநாயகரால் முறையாக நேரம் வழங்கப்படாமை குறித்து முறைப்பாடளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து நாடாளுமன்ற குழுக்களுக்கிடையிலான ஒன்றியத்திடம் முறைப்பாடளிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.
எதிர்க்கட்சி தலைவருக்கு மாத்திரமின்றி, எதிர்க்கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கும் உரிய நேரம் வழங்கப்படாமை குறித்தும் முறைப்பாடளிக்கவுள்ளோம்.
இவை மாத்திரமின்றி புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு வலியுறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லா பிரேரணை
அதற்கான கையெழுத்து பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவற்றை நிறைவு செய்து அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுப்போம்.
நம்பிக்கையில்லா பிரேரணையில் அடுத்த வாரத்துக்குள் கையெழுத்துக்களைப் பெற்று கையளிப்போம். ஏனைய நடவடிக்கைகளும் ஓரிரு வாரங்களுக்குள் நிறைவடையும்.
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதற்காக ஒருங்கிணைப்பிற்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 20 மணி நேரம் முன்
