பகிரங்கமாக அறிவியுங்கள் - ரணிலுக்கு விடுக்கப்பட்ட சவால்
நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தேர்தலுக்கு பணம் வழங்கப்படுமா என்பது குறித்து அதிபர் நாட்டுக்கு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.
பல்வேறு நிறுவன கட்டமைப்புகளை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க அதிபர் 30க்கும் மேற்பட்ட பல்வேறு உத்திகளை மேற்கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டால் அது நீதித்துறைக்கு அவமரியாதையாக அமையும் எனவும் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்
தேர்தல் தொடர்பில் அமைச்சர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், இதன் பின்னணியில் அதிபரின் முக்கிய பங்கு இருப்பதால், நிதியமைச்சராக இருக்கும் அதிபர் நாட்டுக்கு தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று (7) மார்ச் 12 இயக்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கை
நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த ஹெட்டியாராச்சி, நீதிமன்ற உத்தரவு தொடர்பாகக் கூட அதிபர் நேரடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை எனவும் தெரிவித்தார்.
தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒன்றிணைத்து அனைத்துக் கட்சி மாநாட்டை எதிர்வரும் 9ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
