ஆசிரியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் இலக்கு :பிரதமர் ஹரிணி வெளியிட்ட அறிவிப்பு
அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்பதை படிப்படியாக உறுதி செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் இலக்கு என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (08) நாடாளுமன்ற விவாதத்தின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். கல்வியற் கல்லூரிகள் நீண்ட காலமாக மறுசீரமைக்கப்படவில்லை. வளங்கள் மட்டுமல்ல, அவை செயல்படுத்தப்படும் விதமும் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.
பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்கள்
தற்போதைய காலத்திற்கு ஏற்றதாகவும், உத்தேச கல்வி சீர்திருத்தங்களுக்கு ஏற்பவும் ஒரு பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். எமக்குத் தேவையான ஆசிரியர்களை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதற்காக, கல்வியற் கல்லூரிகளில் உள்ள ஆசிரிய மாணவர்களும், ஆசியர் கலாசாலைகளில் உள்ள ஆசிரியர்களும் பயிற்சி பெறுகின்றனர்.
அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக வேண்டும்
அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக வேண்டும் என்ற நிலைக்கு படிப்படியாக வருவதே எமது அரசாங்கத்தின் குறிக்கோள். கல்வியற் கல்லூரிகளில் பட்டம் வழங்கப்படும் நிலைக்கு அதைக் கொண்டு வர விரும்புகிறோம். குளியாப்பிட்டி கல்வியற் கல்லூரியில் ஏற்கனவே பட்டங்கள் வழங்கப்படுகிறது. அதேபோன்று மீதமுள்ள 19 கல்வியற் கல்லூரிகளும் அந்த நிலைக்கு கொண்டு வரப்படவேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
