சம்பளத்தை அதிகரிப்பவர்களுக்கே வாக்களிப்போம் : தமிழ் ஆசிரியர் சங்கத்தின் அதிரடி முடிவு
கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய வேதனத்தை எழுத்து மூலமாக உறுதியளிக்கும் வேட்பாளருக்கே எமது வாக்கு என இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயமானது 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தி சங்கத்தின் நிர்வாகச் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையியே குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அதிபர்கள் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்த்து முன்மொழியப்பட்ட வேதன அதிகரிப்பை ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் வழங்குவதற்கு எழுத்து மூலமான உறுதிமொழியை வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே அதிபர்களும், ஆசிரியர்களும் மற்றும்அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் வாக்களிப்பர்.
கல்விக்கான நிதி
அதுமட்டுமன்றி, ஏனைய நாடுகளில் உள்ளபடி கல்விக்கான நிதி ஒதுக்கீடு முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட வேண்டும் இவற்றை எழுத்து மூலமாக பகிரங்கமாக வெளியிடும் ஜனாதிபதி வேட்பாளருக்கே எமது அதிபர்களும் மற்றும்ஆசிரியர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் வாக்களிப்பர்.

இல்லையேல் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்குகள் பெறுமதியற்றதாகி தேர்தல் கடமைகளையும் புறக்கணிக்க நேரிடும் அத்தோடு 1998 ஆம் ஆண்டுமுதல் மாறி மாறி வருகின்ற ஆட்சியாளர்களிடம் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கையளித்தோம்.
பகிரங்கமான உறுதிமொழி
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தீர்ப்பதாக வாக்குறுதியளித்து பின்னர் ஏமாற்றப்பட்டோம் இது காலம் காலமாகத் தொடர்கின்றது இனிமேலும் நாம் ஏமாறாமல் இருக்க எழுத்து மூலமான பகிரங்கமான உறுதிமொழி எமக்குத் தேவையாக உள்ளது.

எனவே உறுதியளிக்கும் வேட்பாளர் பல லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்று நாட்டின் ஜனாதிபதியாகி கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து நாட்டை வளம்மிக்கதாக்க உறுதி மொழியை விரைவாக அறிவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |