வடக்கில் அதிகரிக்கும் டெங்குநோய்த் தாக்கம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள்
நுளம்புக் குடம்பிகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் தலைமையில் நடைபெற்ற மாகாண டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் போதே, அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிகையில், வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், என்றார்.
சூழல் பாதுகாப்பு
அதிலும் யாழ் பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளிலே நாளாந்தம் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 775 டெங்கு நோயாளர்கள் யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வருடம் முழுவதும் யாழ் மாவட்டத்தில் 3,986 டெங்கு நோயாளர்களே பதிவாகியதுடன் ஆறு (06) மரணங்களும் பதிவாகியது, இதில் ஐந்து கடந்த டிசம்பர் மாதத்திலே பதிவாகியுள்ளது.
யாழ் மாநகர சபை உள்ளிட்ட ஏனைய உள்ளுராட்சி நிறுவனங்கள் தங்களால் இயன்ற அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாக திணைக்களங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இருந்தபோதிலும், பொதுமக்கள் தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவதில்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர், இந்நிலையில், சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காத 1,542 இடங்கள் கடந்த 12 ஆம் திகதி வரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 147 இடங்கள் தொடர்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களை விட படித்த சமூகம் அதிகமாக வசிக்கும் இடங்களிலே சூழல் பாதுகாப்பு மிக மோசமாக காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரபட்சம் இன்றி நடவடிக்கை
அதற்கமையை, சூழலை சுத்தமாக பேணாது நுளம்பு பரவும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த செயற்பாடுகளுக்கு காவல்துறையினரின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளுமாறும், ஒவ்வொரு தெருவிலும் பொதுவான இடங்களில் குப்பை தொட்டிகளை வைத்து, அதனை உரியவாறு பராமரிக்குமாறும் ஆளுநர் தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடுகளில் பொதுமக்களை உள்வாங்கி உள்ளுராட்சி நிறுவனங்கள் செயற்பட வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
இதேவேளை பொதுமக்களும் சமூக பொறுப்புக்களை உணர்த்து செயற்படுவது இன்றியமையாததொன்றென வடக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |