நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணை! நிலாந்தன் குற்றச்சாட்டு
வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான முதலாவது சபை அமர்வில் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் நடப்பட்ட தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளை அகற்றுவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணையில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொல்லியல் திணைக்களத்தால் குழப்பம்
அவர் மேலும் கூறுகையில் , மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது.

1987, 15ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி பிரதேச சபையின் அனுமதி இன்றி தொல்லியல் திணைக்களம் பெயர்ப் பலகைகளை இட்டுள்ளது.
மூன்றாவதாக தமிழ் மொழி
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பெயர் பலகைகளை அகற்றியவர்கள் என்று கூறி 56 பேரை கைது செய்துள்ளனர்.முன்னர் இருந்த எந்த அரசாங்கங்களும் செய்யாத செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் செய்துள்ளது.

இதைவிட தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நடப்பட்ட அனைத்து பெயர் பலகைகளிலும் மொழி உரிமை மீறப்பட்டுள்ளது. இந்த நாட்டின் அரச கரும மொழிகளாக தமிழ், சிங்கள மொழிகள் காணப்படுகின்றன. அதேபோல் வடகிழக்கின் நிர்வாக மொழியாக தமிழ் மொழியே காணப்படுகிறது.
இவ்வாறு இருக்கும் நிலையில் வடகிழக்கின் நிர்வாக மொழியான தமிழ் மொழியை முதலாவதாகவும், சிங்கள மொழியை இரண்டாவதாகவும் எழுதி இருக்க வேண்டும். ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளில் மூன்றாவதாகவே தமிழ் மொழி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதேச சபை சட்டங்களை மீறும் தொல்லியல் திணைக்களம்
தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருக்கும் பிரதேச சபைகளின் அதிகாரங்களை மீறி அரசியல் நோக்கங்களுக்காக, பிரதேச சபை சட்டங்களை மீறி தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனை வன்மையாக கண்டிக்கின்றேன்.

தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகள் அகற்றப்பட்டு பிரதேச சபையின் அனுமதி பெற்று, தமிழ் மொழியை முதன்மைப் படுத்தி மீளவும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |