வடக்கு கரையோரம் நகரும் தாழமுக்கம் - மறு அறிவித்தல்வரை பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கமொன்று உருவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் இந்த தாழமுக்கம் வலுவடைந்து, இலங்கையின் வடக்கு கரையோரத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதிகளில் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் இடைக்கிடை காற்று வீசுவதுடன், சில சந்தர்ப்பங்களில் கடும் மழையுடனான வானிலையும் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (08) பிற்பகல் முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தினங்களில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்படும் அறிவித்தல்களை பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் 9 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, கேகாலை, குருநாகல், மாத்தளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்களுக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
